தமிழ் மொழிக்கு திராவிடம் ஆற்றிய தொண்டுகள் - பகுதி 2

திராவிடம் Oct 01, 2021

முதல் பதிவை படித்தவுடன் மலைத்துப் போய் இருப்பீர்கள் என்று அறிவோம். இதோ மீதம்!

இதுவரை தமிழுக்காக திராவிட கட்சிகள் செய்த தொண்டுகளின் இரண்டாம் தொகுப்பு.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்:

1970 -ஆம் ஆண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.
'தமிழ்நாடு சங்கீத நாடக சபா' என்பது 1969-1971 தி.மு.க ஆட்சியில் 'இயல், இசை, நாடக மன்றம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
திருவனந்தபுரம் பன்னாட்டுத் திராவிட மொழியியல் பள்ளிக்கு நிதி உதவி வழங்கப்பட்டது

தமிழ்த்தாய் வாழ்த்து:

1970-ஆம் ஆண்டிற்கு முன்பு வரை கல்வி நிலையங்களில் நடைபெறும் விழாக்களில் தொடக்கத்தில் இறைவணக்கப் பாடல் பாடப்பட்டு வந்தது.

அதை மாற்றி பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய நாடகக் காப்பியத்தில் உள்ள 'நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்' என்று தொடங்கும் பாடல் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் ஆணையின்படி 1970-ஆம் ஆண்டு முதல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக தமிழக அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டது.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையமைக்க பின்னணிப் பாடகர்களான திரு. டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் திருமதி.பி. சுசீலா ஆகியோர் பாடிய அந்த தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தட்டுக்களாக தமிழக அரசால் வெளியிடப்பட்டது.

திருவள்ளுவர் ஆண்டு:

பெரும்புலவர் மறைமலை அடிகள் தலைமையில் தமிழறிஞர்கள் 1921-ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒரு கூட்டம் நடத்தி கலந்து பேசி தமிழர்களுக்கென்று ஒரு தனி ஆண்டு தேவை என்றும் அந்த ஆண்டு திருவள்ளுவரின் பெயரில் திருவள்ளுவர் ஆண்டு என அறிவிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அதன்படி 1971-ஆம் ஆண்டு முதல் தமிழர்களின் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு என்று தமிழ்நாடு அரசு அறிவித்து அதனை 1971 - ஆம் ஆண்டு முதல் அரசு நாட்குறிப்பிலும், 1972 - ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

பின்னர் 2006 - ஆம் ஆண்டு தமிழர் ஆண்டு சித்திரை 1-ம் தேதி தொடங்கும் என்றிருந்த நடைமுறையை மாற்றி தமிழர்கள் ஆண்டு தை 1-ம் தேதி முதல் தொடங்கும் என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அறிவித்து நடைமுறைப்படுத்தினார். ஆனால் அடுத்து வந்த அ.தி.மு.க அரசு அதனை ரத்து செய்துவிட்டது.

தமிழ்ச் சொல் அகராதி:

அரசு அலுவலர்களுக்குப் பயனளிக்கும் வகையில் ஆட்சி சொல் அகராதியின் மூன்றாம் பதிப்பு தமிழ் வளர்ச்சி இயக்குனர் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டது.

27-9-1969 முதல் துறை தலைமை அலுவலகங்கள் தமக்கான கடிதப் போக்குவரத்துகள் அனைத்தையும் தமிழ் மொழியிலேயே நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. தலைமைச் செயலகத்தின் அனைத்துத் துறைகளிலும் (சட்டம், நீதி, சட்டமன்றம் தவிர) இத்திட்டம் 29-12-1969 முதல் நடைமுறைக்கு வந்தது.

பொது மக்களிடமிருந்து அரசுக்கு தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழில் பதில் எழுதும் முறை 1-4-1970 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

வள்ளுவர் கோட்டம் :

1974-ஆம் ஆண்டு சென்னையில் வள்ளுவர் கோட்டம் கட்டும் பணிகள் திமுக அரசால் தொடங்கப்பட்டது. பணிகள் முடிவதற்குள் திமுக ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது. எஞ்சிய பணிகள் முடிக்கப்பட்டு 1976 - ஆம் ஆண்டு வள்ளுவர் கோட்டம் அடுத்து வந்த அதிமுக அரசால் திறந்து வைக்கப்பட்டது. எனினும் வள்ளுவர் கோட்டத்தை சிந்தித்து, திட்டமிட்டு திருக்குறளின் அடிப்படையில் உருவாக்கி நிலைப்படுத்திய பெருமை முத்தமிழறிஞர் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களையே சாரும் என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த உண்மை ஆகும்.

தமிழர் அடையாளங்கள்:

பூம்புகாரில் சிலப்பதிகார சிற்பக் கலைக் கூடம் அமைக்கப்பட்டது.
தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைக்கப்பட்டது.
தர்மபுரியில் அவ்வையாருக்கு நெல்லிக்கனி தந்த மன்னர் அதியமானுக்கு சிலைகளுடன் கோட்டமும் கட்டப்பட்டது.
சென்னை கடற்கரையில் விவேகானந்தர் கலாச்சார கண்காட்சியுடன் விவேகானந்தர் இல்லம் திமுக ஆட்சியில் அமைக்கப் பட்டது.
பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
பல்கலைக்கழக வளாகத்தில் பாரதிதாசன் சிலை அமைக்கப்பட்டது. சென்னை எழும்பூரில் தமிழ் வளர்ச்சி வளாகம் கட்டப்பட்டது.
ஆந்திரா மாநிலம் குப்பம் நகரில் திராவிடப் பல்கலைக்கழகம் அமைக்க தமிழக அரசு நிதி உதவி வழங்கியது.
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

அகர முதலி திட்டம்:

1974- ஆம் ஆண்டு திமுக அரசால் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் நிறுவப்பட்டு அதன் முதல் இயக்குநராக தேவநேயப் பாவாணர் நியமிக்கப்பட்டார்.

அவர் அகரமுதலி தொகுதியை உருவாக்கி விட்டு 1981 - ஆம் ஆண்டு மரணமடைந்தார். முதல் தொகுதி 1985 இல் வெளியிடப்பட்டது. 1989-90 திமுக ஆட்சி காலத்தில் இப்பணி மீண்டும் தொடங்கப்பட்டது. 1991 இல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது எனினும் பணிகள் முடிந்து 1992-ஆம் ஆண்டு இரண்டாம் தொகுதி வெளியிடப்பட்டது.

1996 திமுக ஆட்சிக்கு வந்ததும் அதற்காக நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட அந்நூலின் நான்கு மற்றும் ஐந்தாம் தொகுதிகள் 1997 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டன. அகரமுதலி வரிசையில் ஆறு மற்றும் ஏழாம் தொகுதிகள் 16-1-2008 முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டன.

மெட்ராஸ் - சென்னை ஆனது:

'மெட்ராஸ்' என்று அழைக்கப்பட்டு வந்த இந்நகரம் 30-9-1996 முதல் 'சென்னை' என்று அழைக்கப்படும் என்று திமுக அரசு ஆணை பிறப்பித்தது.

உலகத் தமிழர்களுக்கு உதவி:

தமிழ்நாடு அரசின் தமிழர் குழு சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பயணம் செய்து, 36 நாடுகளில் வாழும் 87 லட்சம் தமிழர்களின் நலன் மேம்பாட்டில் அக்கறை செலுத்தியது.
22 நாடுகளில் வாழும் தமிழர்களுக்குத் தேவையான நூல்களை தமிழ்நாடு அரசு அனுப்பி உதவியது.
20 மாவட்டங்களில் தமிழ்நாடு அரசின் சார்பில் இசைப் பள்ளிகள் நடத்தப்பட்டன. ஆசிய ஆய்வு மையத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு நிதி உதவி வழங்கியது.
1997-98ஆம் ஆண்டு சேலம், தஞ்சாவூர், விருதுநகர், காஞ்சிபுரம் போன்ற மண்டலங்களில் தமிழ் பண்பாட்டு மையங்கள் திமுக அரசால் ஏற்படுத்தி செயல்படுத்தப்பட்டன.

தமிழ்மொழி வளர்ச்சிக்கு தனி அமைச்சர் பதவி:

1996-2001-ல் திமுக ஆட்சியில் தமிழ் மொழிக்கென்று தனியாக அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டது.
1-1-2000 அன்று கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது.

தமிழ் அறிஞர் நூல்கள் நாட்டுடமை:

1996-2001 திமுக ஆட்சியில் தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள் திரு.வி.க., கல்கி, நாமக்கல் கவிஞர். வ.உ.சிதம்பரனார், கா.மு.ஷெரிப், நாவலர் சோமசுந்தரபாரதியார், பரலி சு.நெல்லையப்பர், வ.வெ.சு.ஐயர், வெ. சாமிநாத சர்மா ஆகிய தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.

குறள் பீட விருது:

மத்திய அரசு ஞானபீட விருது வழங்குவது போல, தமிழ் எழுத்தாளர்களுக்குத் தமிழ்நாடு அரசு குறள் பீட விருது வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியது. தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கான தொகை ரூபாய் பத்தாயிரம் என்பது 1996 ல் ரூ.20,000 ஆகவும் 1999 ல் ரூ.ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டது.

தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம்:

58 வயது நிரம்பிய தமிழறிஞர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூபாய் 400 வழங்கும் திட்டம் 1996-2001-ல் திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அத் தொகை ரூபாய் 500 ஆக உயர்த்தப்பட்டது. 467 தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. மொழிப்போர் தியாகிகள் 2055 பேருக்கு ரூபாய் 3,000 மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டது. உயிரிழந்த மொழிப்போர் தியாகிகள் 476 பேர்களின் குடும்பத்தாருக்கு மாதம் ரூபாய் 1500 ஓய்வு ஊதியம் வழங்கப்பட்டது. மொழிப்போர் தியாகிகள் 1515 பேருக்கு இலவச பேருந்து பயண உரிமை அட்டை வழங்கப்பட்டது. 940 தமிழறிஞர்களுக்கும், 411 தமிழ் அறிஞர்களின் மரபுரிமையாளர்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

தமிழ் மொழி கட்டாயப் பாடம்:

1996-2000 ல் 1-ஆம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடம் என திமுக அரசால் அறிவிக்கப்பட்டது. 2006-2011 திமுக ஆட்சியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப் பாடம் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான சட்டம் இயற்றப்பட்டது.

தமிழ் செம்மொழி :

முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி  அவர்களின் தொடர் முயற்சிகளால் மத்திய அரசு தமிழ் மொழியை செம்மொழி என அறிவித்தது. செம்மொழி நிறுவனத்தில் உயர் நிலைக் குழுக்களாக எண்பேராயமும், ஐம்பெருங்குழுவும் அமைக்கப்பட்டன.

முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தலைமையில் 18-8-2007 அன்று சென்னையில் நடந்த அரசு விழாவில் தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிறுவனத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கம் கிராமத்தில் 16.59 ஏக்கர் நிலம் தமிழக அரசால் வழங்கப்பட்டது. முதலமைச்சர் அவர்களின் தலைமையில் சென்னையில் மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனம் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. அந் நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ.76.32 கோடி நிதி வழங்கியது.

தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று 100 ஆண்டுகளுக்கு முன்பே முதல் குரல் கொடுத்தவரான பரிதிமாற்கலைஞர் அவர்கள் பிறந்த வீடு அரசு நினைவு இல்லமாக மாற்றப்பட்டது.

கணினித் தமிழ்:

கணினியில் தமிழில் பயன்பாட்டை வளர்த்திடும் வகையில் மின் அகராதி கிளவியாக்கம் மொழித்திறன் எனும் மென்பொருள் உருவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

செம்மொழி விருதுகள்:

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் விருதுகள் 28-3-2010 அன்று முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டன.

முத்தமிழறிஞர் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்குத் தம்முடைய சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடி வழங்கி, தமது பெயரில் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் அறக்கட்டளை எனும் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன் சார்பில்,

பண்டைய தமிழ்ப் பண்பாடு, நாகரிகம் பற்றி ஆய்வு செய்து, செம்மொழித் தமிழ் ஆய்வுக்கு சீரிய முறையில் பங்காற்றி வரும் தமிழ் அறிஞர் அல்லது நிறுவனத்திற்கு, கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது ஆண்டுதோறும் வழங்க ஏற்பாடு செய்தார்.

அதன்படி அவரது பெயரில் அந் நிறுவனத்திற்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை:

140 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அவர்களின் சான்றாவணம் அளித்த 81 தமிழறிஞர்களின் மரபுரிமையாளர்களுக்கு பரிவுத் தொகையாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 5 கோடியே 43 லட்சம் வழங்கப்பட்டது. சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் நூலாசிரியர்களுக்கு என்று வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ. 10,000 என்பது ரூ. 20,000 ஆகவும், பதிப்பகத்தாருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ. 2,000 த்தில் இருந்து ரூ. 5,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாகப் பயன்படுத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 2006 டிசம்பர் 6-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. தமிழ் மொழி வளர்ச்சிக்கு திமுக அரசு, தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஆற்றிய தொண்டு வரலாற்று சிறப்பு மிக்கது. திமுக தொடர்ந்து பணியாற்றி தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஏற்றம் சேர்த்து வருகிறது.

உலகத் தமிழர்களின் நலனுக்கும் தமிழ் மொழி சிறப்பிற்கும் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிவரும் தமிழ்த் தொண்டும் போற்றத் தக்கதாகும். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், தமிழர்களின் முன்னேற்றத்திற்கும் அவர் ஆற்றிவரும் சேவை மகத்தானது ஆகும்.

சமீபத்தில் சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில் 'தமிழ் வாழ்க' பலகை திரும்ப வைக்கப்பட்டது திராவிடம் தமிழை தூக்கிப்பிடிக்கும் என்பதற்குச் சாட்சி.

தமிழ் வாழ்க! வாழ்க திராவிடம் !
--
திராவிடன்


இந்த திட்டங்களும், ஆணைகளும் இணையத்தில் பல பக்கங்களில் இருந்து எடுத்து தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றி:
இந்து தமிழ் நாளேடு, கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி மற்றும் பல்வேறு ஊடகப் பதிவுகள்.

Tags