தமிழ் மொழிக்கு திராவிடம் ஆற்றிய தொண்டுகள் - பகுதி 01

திராவிடம் Sep 29, 2021

திராவிடம் என்னவெல்லாம் செய்தது என்று பார்த்துக் கொண்டே வருகிறோம். ஆனால் தமிழருக்கும், தமிழ் மொழிக்கும் என்ன செய்தது என்பதையும் பார்க்க வேண்டாமா?

முதன்முதலில் திராவிடக் கட்சியின் ஆட்சி, காங்கிரஸ் அரசை வென்று  1968-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் அமைகின்றது.

அந்த ஆட்சியில் எதிர்கால முன்னேற்றத்திற்கு வேண்டிய அனைத்து அடிப்படை அடித்தளங்களும் அமைத்துக் கொடுக்கப்பட்டன. தமிழ் மொழி வளர்ச்சிக்கு தி.மு.க பெருந்தொண்டாற்றி வருகிறது.

முதலமைச்சர் அண்ணா அவர்களால் 1968-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் நாள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிக் கொள்கை தமிழ் நாடு அரசின் ஆட்சி மொழிக் கொள்கையாக அறிவிக்கப் பாடுபடுவதில் ஆரம்பித்து எண்ணற்ற தொண்டுகள் செய்து வந்திருக்கின்றது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிமுகப்படுத்திய இரு மொழிக் கொள்கைதான் தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக இன்றும் விளங்குகின்றது. தமிழ் ஆட்சி மொழியாகவும், ஆங்கிலம் துணை மொழியாகவும் இருப்பதால் தான் இன்று தமிழர்கள் உலக அளவில் பல துறைகளிலும் மின்னுகிறார்கள்.

அன்றே, 'ஆங்கிலம் தான் உலகத்தின் தொடர்பு மொழி, அதை படிப்பதன் மூலம் உலகத்தின் அனைத்து வாய்ப்புகளையும் நாம் எளிதில் பெற முடியும்' என்று சிந்தித்துச் சட்டமாக இயற்றியது திராவிட இயக்கம்.

அது மட்டுமா? பல சட்டங்கள், பல திட்டங்கள் தமிழுக்காக இயற்றியது திராவிட கட்சிகள். அவர்கள் ஆட்சிக் காலத்தில் தமிழை தூக்கிப் பிடித்து எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம் தமிழுக்கு பெரும் தொண்டாற்றியது.   அப்படி அவர்கள் செய்தவற்றை கீழே தொகுத்து வழங்கியுள்ளேன்.

பள்ளிகளில் தமிழுக்கு முதலிடம் :

1967-ல் தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு உயர்நிலைப் பள்ளி, கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கான முதன்மை பாடம் ஆங்கிலம் என்றும், இரண்டாம் பாடம் தமிழ் என்றும், மூன்றாம் பாடப் பிரிவாக பிற பாடங்களும் இருந்தன.

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சரானதும் 1968-ஆம் ஆண்டு மாணவர்களுக்கான முதன்மை பாடம் தமிழ் என்றும், இரண்டாம் பாடம் ஆங்கிலம் என்றும் மூன்றாம் பாடம் பிற பாடங்கள் என்றாக்கி அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு, தமிழ் மொழிக்கு முதலிடமும், மேன்மையும் ஏற்படுத்தப்பட்டது.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை தொடக்கம்:

1916-ஆம் ஆண்டு வரை சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனியாக ஒரு துறை இருந்ததில்லை. கீழ்த்திசை மொழிகளில் ஒன்றாகத் தான் தமிழ் இருந்தது. 1923-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 26 ஆம் நாள் முதல் தமிழ் மொழி சென்னை பல்கலைக்கழகத்தில் கட்டாய மொழியாக ஆக்கப்பட்டது.

பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனித்துறை உருவாக்கப்பட்டது. சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக இருந்தது. மருத்துவம் படிக்கும் மாணவர்கள் கட்டாயம் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிலைதான் முன்பு இருந்தது. இந்த நிலையை மாற்றி 1923-ஆம் ஆண்டு நீதிக்கட்சி அவர்கள் ஆட்சியில் புதிய சட்டம் இயற்றியது.

தமிழுக்கு நன்கொடை:

1969-71 வரை தென்னிந்திய மொழிகளின் புத்தக நிறுவன வளர்ச்சிக்கு, ரூபாய் 2 லட்சத்து 45 ஆயிரம் வழங்கப்பட்டது.

1970-71ல் தமிழ் பட்டப்படிப்பு தொடங்குவதற்கு வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பாக நிதி வழங்கப்பட்டது.

அதன்பின் ஆண்டுதோறும் அப்பல்கலைக் கழகத்திற்கு ரூபாய் பத்தாயிரம் வீதம் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நிதி வழங்கியது.

தமிழ்மொழி வளர்ச்சிக்காக அலகாபாத், கேரளா, கல்கத்தா, ஆந்திரா, உஸ்மானியா பல்கலைக் கழகங்களுக்கு தமிழ்நாடு அரசு நிதி வழங்கியது.

புதுடெல்லியில் கட்டப்பட்டு வந்த டெல்லி தமிழ்ச்  சங்கக் கட்டிடத்திற்கு, இரண்டாம் கட்டமாகத் தமிழக அரசு ரூ.50,000 நன்கொடையாக வழங்கியது.

இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு:

இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு 3-1-1968 அன்று முதலமைச்சர் அண்ணா அவர்கள் தலைமையில், சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகிர் உசேன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மாநாட்டின் ஒரு பகுதியாக 1-1-1968 அன்று உலகப் புகழ்பெற்ற மேதை டாக்டர் ஏ.ராமசாமி முதலியார் அவர்கள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் முழு உருவச் சிலையை சென்னை அண்ணா சாலையில் திறந்து வைத்தார்.

2-1-1968 சென்னை மெரினா கடற்கரையில் தமிழர்களின் அடையாளச் சின்னங்களான திருவள்ளுவர், கம்பர், அவ்வையார், வ. உ. சிதம்பரனார், பாரதியார், பாரதிதாசன், ஜி. யு. போப், கால்டுவெல், சிலப்பதிகார நாயகி கண்ணகி ஆகியோரது சிலைகள் திறந்து வைக்கப்பட்டன.

சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தலா 3 லட்ச ரூபாய் முதலீட்டில் திருக்குறள் ஆராய்ச்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1968-1969-ல் கல்லூரிகளில் தமிழ் மொழி பயிற்று மொழியாக்கப்பட்டது.

தமிழ்நாடு பெயர் சூட்டல்:

1967 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 'சென்னை ராஜ்ஜியம்' என்பது 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றப்பட வேண்டும் என்று முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களால் முன்மொழியப்பட்ட மசோதா சட்டமன்ற இரு அவைகளிலும் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று 14.1.1969 தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. உடல்நலம் குன்றியிருந்த நிலையிலும் முதலமைச்சர் அண்ணா அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கில் அதற்காக நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு நம் மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டினார்கள்.

பிறமொழி சொற்கள் தமிழ் சொற்களாகின :

தமிழ்நாடு அரசு சின்னத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'சத்யமேவ ஜெயதே' என்பது 'வாய்மையே வெல்லும்' என்றும்,

'மெட்ராஸ் கவர்மெண்ட்' என்பது 'தமிழ்நாடு அரசு' என்றும்,

புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள 'செக்ரிடரியட்' என்பது தலைமைச் செயலகம் என்றும்,

'அசம்பிளி' என்பது சட்டமன்றம் என்றும்,

'ஸ்பீக்கர்' என்பது 'பேரவைத் தலைவர்' என்றும்,

'மந்திரி' என்பது அமைச்சர் என்றும்

'கனம்' என்பது 'மாண்புமிகு' என்றும்,

'கலெக்டர்' என்பது மாவட்ட ஆட்சித் தலைவர் என்றும்,

தமிழ் மொழியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டன.

'ஸ்ரீ' என்பது 'திரு' என்றும்

'ஸ்ரீமதி' என்பது 'திருமதி' என்றும்

'குமாரி' என்பது 'செல்வி' என்றும்

'குமாரன்' என்பது 'செல்வன்' என்றும்,

'விவாஹ சுப முகூர்த்த பத்திரிக்கை' என்பது 'திருமண அழைப்பிதழ்' என்றும்,

'கும்பாபிஷேகம்' என்பது 'குடமுழுக்கு' என்றும்,

'கிரகப்பிரவேசம்' என்பது 'புதுமனை புகுவிழா' என்றும்

'அக்ராசனர்' என்பது 'தலைவர்' என்றும்,

'காரியதரிசி' என்பது செயலாளர் என்றும்,

'பொக்கிஷதாரர்' என்பது 'பொருளாளர்' என்றும்,

திராவிட இயக்கத் தலைவர்களின் தொடர் முயற்சிகளால் மொழி மாற்றம் செய்யப்பட்டன. இதைப்போல் சமஸ்கிருதத்தில் நடைமுறையில் இருந்த பல சொற்கள் தமிழ்ச் சொற்களாக மாற்றப்பட்டன.

ஆரிய கலாச்சாரத்தின் தாக்கத்திலிருந்து தமிழ்ச் சமுதாயத்தை மீட்டுத் தமிழ் பண்பாட்டின் மாட்சிக்குக் கொண்டு வந்த திராவிட இயக்க தலைவர்கள், சுயமரியாதைத் தமிழ் முறை திருமணங்களை நடத்தி வைப்பதிலும் வெற்றி கண்டுள்ளனர்.

இது தமிழ்ப் பண்பாட்டின் அடித்தளத்தை பலப்படுத்தி அன்னியமொழி படையெடுப்பில் இருந்து, தமிழ் மொழியைப் பாதுகாப்பதின் பேரரணாகும்.

1967-வரை 'ஸ்டேட் எக்ஸ்பிரஸ்' என்ற ஆங்கிலப் பெயரோடு வலம் வந்து கொண்டிருந்த பேருந்துகள் 1969 ஆண்டு தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் 'தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம்' எனத் தமிழில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பேருந்துகளில் திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டு, திருக்குறளும் அதன் விளக்கமும் அருகில் எழுதப்பட்டு மக்களுக்கு நல்ல கருத்துக்கள் மனதில் பதிய ஆவண செய்யப்பட்டது.

1968 ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் நாள் முதல் மாநில போக்குவரத்து மேல்முறையீட்டு தீர்ப்பாய அலுவலகம் தமிழில் செயல்படத் தொடங்கியது.

1968 ஜனவரி முதல் கீழமை நீதி மன்றங்களின் சாட்சிகள் தமிழில் விசாரிக்கப்பட்டன. பின்னர் நீதி விசாரணை தமிழில் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகளும் தமிழில் வழங்கப்பட்டன.

1-4-1970 முதல், நீதித்துறை மற்றும் சட்டத்துறை ஆகியவற்றில் தமிழ்த் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது. முதன்முதலில் சட்ட அகராதி 1968-ஆம் ஆண்டு தமிழில் வெளியிடப்பட்டது.

இப்படி எத்தனையோ ஆக்கங்கள் செய்து, தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் ஏற்றம் சேர்த்து வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

1996-2001 தி.மு.க ஆட்சியில் ஊதியம் மற்றும் அரசின் நிதிப் பரிவர்த்தனை கருவூலத்தில் அனைத்து ஆவணங்களும் தமிழில் வெளியிடப்படுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த திட்டங்களும், ஆணைகளும் இணையத்தில் பல பக்கங்களில் இருந்து எடுத்து தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.

இன்னும் நிறைய செய்திருக்கிறது திராவிடமும் திராவிடக் கட்சிகளும் அதை அடுத்த பதிவில் தொடர்ச்சியாகப் பார்ப்போம்.

தமிழ் வெல்லும்!

--
திராவிடன்


நன்றி:
இந்து தமிழ் நாளேடு, கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி மற்றும் பல்வேறு ஊடகப் பதிவுகள்.

Tags