கலைஞரும் குறளும் | பகுதி 1 [வள்ளுவர் கோட்டம்]

கலைஞர் Oct 10, 2021
வள்ளுவர் கோட்டம், சென்னை 

கலைஞர் என்றால் தமிழ் என்று அனைவரும் அறிந்த ஒன்று! அவருக்குத் தமிழ் இலக்கியத்தின் மீதும், தமிழ் மீதும் தீராத பற்றும் காதலும் இருந்ததும் உலகம் அறிந்ததே!

ஆனால் அவர் குறிப்பாக திருக்குறளை மிகவும் நேசித்தார் என்பதற்குச் சான்று குமரியில் திருவள்ளுவர் சிலை, சென்னையில் வள்ளுவர் கோட்டம் போன்ற காலம் மறக்க முடியாத நினைவுச் சின்னங்கள்.

அது மட்டுமா?

ஒவ்வொரு பேருந்திலும் திருக்குறள் வாசகங்கள், எல்லா நூலகங்களிலும் திருக்குறள் மற்றும் அதன் விளக்க உரை நூல்கள், எல்லா அரசு அலுவலகங்களில் திருவள்ளுவரின் படம் வைக்க அதிகாரபூர்வமாக அரசாணை வெளியிட்டு ஆவணப்படுத்தியது என்று திருக்குறளுக்கு அவர் செய்த தொண்டுகள் பல.

அவர் ஏன் திருவள்ளுவருக்குச் சிலை வைத்தார்? எதற்கு திருக்குறளுக்கும் வள்ளுவனுக்கும் ஒரு கோட்டம் கட்டினார்?

பார்ப்போமா?

வள்ளுவரின் திருக்குறளை ஒரு அரசியல் பிரதியாக வாசிக்கும் பழக்கம் நம்மிடம் இல்லை. கலைஞரே அதனைத் தொடங்கி வைத்தார்.

எது தேவையோ அதுவே தர்மம்! என்று எல்லாவற்றையும் தர்மமாக்கும் சாணக்கியனின் அர்த்த சாஸ்திரத்தித்தைத் திருக்குறளுடன் ஒப்பிட்டார்.

போர், வன்முறை, ஆக்கிரமிப்பு, ஆதிக்கம், பிரிவினை மற்றும் வெறுப்புக்கு எதிராகப் பேசுகிற 'திருக்குறள்',  இந்தியா முழுமைக்கும் அரசியலுக்கான அறமாகவும், அன்பை வரையறுக்கும் உன்னதமாகவும் விளங்குகிறது. அது முன்வைக்கும் மாற்றுக் கருத்தியலில், கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் அதைத்தூக்கி சுமந்ததின் நுட்பமான அரசியல் புரியவரும்.

வள்ளுவர் கோட்டம்!

இந்நினைவகம், 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் நாள் அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1976 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. ஆனால் 1975-ம்  ஆண்டே நெருக்கடி நிலை அறிவித்து, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திமுக ஆட்சியைக் கலைத்தார்.

எந்த ஒரு கட்டிடத்தை பார்த்துப் பார்த்து செதுக்கினாரோ அந்தக் கட்டிடத்தை அவரை அழைக்காமல் அவர் பெயரைக் கூட வைக்காமல் திறந்து வைத்தார்கள்.

அவர் பெயர் இல்லை என்றால் என்ன?

காலத்திற்கும் வரலாறு சொல்லும் வள்ளுவர் கோட்டத்தை அமைத்தவர் கலைஞர் என்று.

அவர் எவ்வளவு பெரிய ரசிகன் என்று அந்தக் கட்டிடம் வடிவமைக்கப்பட்ட விதத்தைப் பார்த்தால் தெரியும்.

திருவாரூர்க் கோயில் தேரின் மாதிரியில் கட்டப்பட்டுள்ள சிற்பத் தேர் அமைப்பு ஆகும்.

இதன் அடிப்பகுதி 25 x 25 அடி (7.5 x 7.5 மீட்டர்) அளவு கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இது 128 அடி (39 மீட்டர்) உயரம் கொண்டது.

7 அடி (2.1 மீட்டர்) உயரமான இரண்டு யானைகள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. தேரின் ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொன்றும் தனிக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றன.

கரைகளில் உள்ள சக்கரங்கள் பெரியவை. ஒவ்வொன்றும் 11.25 அடி (3.43 மீட்டர்) குறுக்களவும், 2.5 அடி (0.76 மீட்டர்) தடிப்பும் கொண்டவை. நடுவில் அமைந்துள்ள இரு சக்கரங்களும் சிறியவை.

இத்தேரில் அய்யன் திருவள்ளுவரின்  சிலை வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை வைக்கப்பட்டுள்ள கருவறை நில மட்டத்திலிருந்து 30 அடி (9 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது.

எண்கோண வடிவில் அமைந்துள்ள இக்கருவறை 40 அடி (12 மீட்டர்) அகலமானது. இக்கருவறை வாயிலில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த தூண்கள் அழகுற அமைந்துள்ளன.

இத்தேரின் முன்னுள்ள அரங்கத்தின் கூரைத் தளத்திலிருந்து இச்சிலை வைக்கப்பட்டுள்ள கருவறைப் பகுதியை அணுக முடியும். இத்தேர் அமைப்பின் கீழ்ப்பகுதி, திருக்குறளிலுள்ள கருத்துக்களை விளக்கும் புடைப்புச் சிற்பங்களால் அழகூட்டப் பட்டுள்ளது.

அரங்கம்:

220 அடி (67 மீட்டர்) நீளமும், 100 அடி (30.5 மீட்டர்) அகலமும் கொண்ட இங்குள்ள அரங்கம் 4000 மக்களைக் கொள்ளக்கூடியது என்று கூறப்படுகின்றது. இவ்வரங்கத்தின் வெளிப்புறமாக 20 அடி (6 மீட்டர்) அகலம் கொண்ட தாழ்வாரங்கள் உள்ளன.

இவ்வரங்கத்தின் ஒரு பகுதியில் மேற் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இது குறள் மணிமாடம் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது. திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களும், கற்பலகைகளில் செதுக்கிப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் அறத்துப்பாலைச் சேர்ந்த குறள்கள் கருநிறப் பளிங்குக் கற்களிலும், பொருட்பால், காமத்துப் பால் என்பவற்றுக்குரிய பாடல்கள் முறையே வெள்ளை, செந்நிறப் பளிங்குக் கற்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், குறள்களில் உள்ள கருத்துக்களைத் தழுவி வரையப்பட்ட, நவீன, மரபுவழி ஓவியங்களும் உள்ளன.

வேயாமாடம்:

வேயாமாடத்திலிருந்து கருவறை, கோபுரம், கலசம் ஆகியவற்றின் தோற்றம்:
அரங்கத்தின் கூரைத்தளம் வேயாமாடம் எனப்படுகின்றது. இவ் வேயாமாடத்துக்குச் செல்வதற்கு அரங்கத்தில் வாயிலுக்கு அருகில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இத் தளத்திலிருந்து, கருவறையை அணுக முடியும்.

இங்கேயிருந்து சில படிகள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் பார்க்கலாம். இத் தளத்திலிருந்து கருவறை மேல் அமைந்த கோபுரத்தையும் கலசத்தையும் அண்மையிலிருந்து பார்ப்பதற்கு இத் தளம் வசதியாக உள்ளது.

அத்துடன், கட்டிடத்தைச் சுற்றியுள்ள பூங்காவின் அழகையும் இங்கிருந்து பார்த்து ரசிக்கமுடியும். சென்னையில் மத்தியில் அமைந்துள்ளதால் இதற்கு போக்குவரத்து வசதியும் அமையப்பெற்றுள்ளது.

திருவள்ளுவருக்கு சிலையும் அமைத்து அதை இந்துத்துவத்தின் எதிர்ப்பு வெளிப்பாடாகவும் காட்டிய முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள், குமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்த சூட்சமத்தை அடுத்த பதிவில் காண்போம்.

தமிழ் வெல்லும்!
--
திராவிடன்

Tags