திராவிட நாடு கொள்கையும், திராவிடர் இயக்கமும்!

இராஜாஜி அரசின் மும்மொழிக் கொள்கையின் காரணமாகத் திராவிட இயக்கத்தினர் திராவிட நாடு கோரும் நிலைக்கு வந்தனர். 1940-களின் முதல் பாதியில் உருவான இக்கொள்கை 1944-ஆம் ஆண்டில் இறுதி வடிவம் பெற்றது.

பெரியார் தலைமையிலான இயக்கம் திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றதும், இவ்வாண்டிலேயே.

இவ்வாண்டில் (1944) சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் (16ஆவது தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாடு) வேறு பல தீர்மானங்களுடன், திராவிட நாடு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

முழு தன்னாட்சி கொண்ட திராவிட நாடு; மத்தியில் கூட்டாட்சி, என்பதே இக்கோரிக்கையின் முக்கிய அம்சமாக இருந்தது. பல துடிப்புள்ள இளைஞர்களையும் இணைத்துக்கொண்டு திராவிடர் கழகம் வளர்ந்து வந்தது. திராவிடர் கழகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக சி. என். அண்ணாத்துரை திகழ்ந்தார்.

திராவிடர் கழகத்தின் செயற்பாடுகள் சமுதாய மட்டத்திலேயே முனைப்புப் பெற்றிருந்தது.

சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பிராமண ஆதிக்க எதிர்ப்பு, பெண்களின் உரிமைகள் ஆகியவை தொடர்பான விடயங்களில் இவர்கள் தீவிர கவனம் செலுத்தினர்.

ஆனால் இதற்கு முன்னரே நீதிக்கட்சியின் ஆங்கில நாளேடான ‘ஐஸ்டிஸ்’ இதழில் (9.11.1917), கட்சியின் அரசியல் கொள்கை பற்றி மருத்துவர் டி.எம். நாயர் பின்வருமாறு எழுதியுள்ளார்.

“கேரளம், கன்னடம், ஆந்திரம், தமிழ்ப் பிரதேசங்கள் அடங்கியது தென் இந்தியா. இவை சேர்ந்ததே இன்றைய சென்னை மாகாணம். இந்த தென்னிந்தியாவில் வாழும் மக்கள் ஒரே கூட்டத்தவர். இந்த நான்கு சகோதரர்கள் பேசும் பாஷைகள் ஒரே மூலத்திலிருந்து பிரிந்தவை. இந்தத் தென்னிந்தியா, இந்தியாவின் மத்திய அரசிலிருந்து விலகி, நான்கு பிரதேசங்களும் சேர்ந்த கூட்டரசு ஏற்பட வேண்டும். எங்கள் தென் இந்திய நல உரிமைச் சங்கம் அதற்காகவே ஏற்பட்டது. அதற்காகவே பாடுபடப்போகிறது”.

"திராவிட நாடு, திராவிடருக்கே!" என்ற முழக்கத்தை முதன்முதல் எழுப்பியவர், மருத்துவர் நாயர்.

"சென்னை மாகாணத்தில் அடங்கியுள்ள தமிழ் பேசும் மாவட்டங்களை மட்டும் தனியாகப் பிரித்து முழுத் தன்னுரிமை உள்ள தனி மாநிலமாக இயங்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் (Constitution of Tamil Districts in the Madras Presidency into a province with complete Self-Government)”

என்ற மருத்துவர் டி.எம். நாயரின் கருத்தை தில்லி மாநிலங்கள் அவையில் சர்.சி. சங்கரன் நாயரும், பி.சி. தேசிகாச்சாரி என்பவரும் இணைந்து 1926 பிப்ரவரியில், மேலே கண்ட தீர்மானத்தை முன் மொழிந்தனர். அத்தீர்மானத்தை மாநிலங்கள் அவை 15.3.1926இல் தள்ளுபடி செய்தது.

1931 திசம்பரில், சர். சி. சங்கரன் நாயர் பின் கொண்டுவந்த தீர்மானத்தை மாநிலங்கள் அவையில் முன் மொழிந்தார்.

"இந்திய கவர்னர் ஜெனரல் அவர்களுக்கு, இந்தப் பேரவை, பின் கண்ட முடிவை, இந்திய விவகாரங்களுக்கான செயலாளருக்குப் பரிந்துரை செய்து, இந்தியாவில் உள்ள எல்லா மாகாணங்களும் முழுத் தன்னுரிமை பெற்றவையாக அமைவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்க வேண்டுகிறேன். அல்லது குறைந்தபட்சம் எந்த எந்த மாநிலங்கள் அதற்குத் தகுதி வாய்ந்தனவையாக இருப்பதாக இந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் முடிவு செய்கிறாரோ அவற்றுக்கு முழுத் தன்னுரிமை வழங்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன்’’

தீர்மானத்துக்கு ஆதவராகச் சர்.சி. சங்கரன் நாயர், சையத் அப்துல் ஹபீஸ், கான்பகதூர் சவுத்ரி முகமது தின், நாராயணசாமி செட்டி ஆகிய நால்வரே வாக்களித்தனர்; எதிராக 16 பேர் வாக்களித்தனர்.

1937இல் சென்னை மாகாணத்தில் காங்கிரசுக் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், சென்னையில் உள்ள 125 உயர்நிலைப்பள்ளிகளில் இந்தியைத் தேர்வுக்குரிய கட்டாயப் பாடமாக வைத்து ஆணை பிறப்பித்தார். தமிழர் அனைத்துத் தரப்பினரும் ஒன்று திரண்டு, கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடினர்.

அந்தப் போராட்டத்தை விளக்கிக் கூறும் பொருட்டு இந்தி எதிர்ப்புக் கால் நடைப் படை பரப்புரை செய்துகொண்டு சென்னைக் கடற்கரையை 11.9.1938இல் அடைந்தது.

`தமிழ்நாடு தமிழருக்கே!’ எனும் முழக்கத்தை முதன்முதலாக எழுப்பினார் பெரியார்.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள் பலரும், "தமிழ்நாடு தமிழருக்கே என்றால் எங்கள் கதி என்ன?" என்று பெரியாரிடம் முறையிட,

தென்னிந்தியர் நல உரிமைச் சங்கத்தின் கமிட்டிக் கூட்டத்தில் "திராவிட நாடு திராவிடருக்கே" எனும் கொள்கை முழக்க விளக்க அறிக்கையை பெரியார் ஈ.வெ.ரா. 20.11.1939-இல் மெயில், “The Mail” ஆங்கில ஏட்டில் வெளியிட்டார். அடுத்து "திராவிட நாடு திராவிடருக்கே" என்பதை விளக்கி, குடி அரசு 17.12.1939 நாளிட்ட இதழில் தலையங்கம் எழுதினார்.

“திராவிட நாடும் நாட்டு மக்களும் திராவிட நாட்டவர்கள் அல்லாத அந்நியரின் எல்லா விதமான சுரண்டல்களிலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டுக் காப்பாற்றப்பட வேண்டும்”,

என்று பெரியார் - 6.1.1945 குடியரசு இதழில் எழுதினர். 1956 நவம்பர் 1 அன்று மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு 4-11-1956 அன்று திருச்சியில், திராவிடர் கழக மத்திய செயற்குழுவைக் கூட்டி “தமிழ்நாடு தமிழருக்கே” என்கிற கோரிக்கையை முன்வைத்தார். தன்னுடைய இறுதிக்காலம் வரை அக்கோரிக்கையில் உறுதியாக இருந்தார்.

இதுதான் பெரியாரும், நீதிக் கட்சி பிறகு திராவிடர் கழகமாக மாறியதும், திராவிட நாடு கேட்டதின் வரலாறு.

ஆனால், அதே திராவிட நாடு கேட்ட திமுக மற்றும் அண்ணா அதைக் கைவிட்டது வேறு ஒரு வரலாறு. அதை மற்றொரு பதிவில் பார்ப்போம்.

இன்று கொங்கு நாடு வேண்டும் என்று சங்கிகள் கேட்கும்பொழுது பரவலாகத் திராவிட நாடு கோரிக்கை எழுந்ததைக் கண்டோம். அதைக் கண்டு பீதியடைந்த ஆர். எஸ். எஸ் தலைமை பாஜக தலைமையிடம் சொல்லி இரண்டே நாளில் அது தனி நபர் கருத்து என்று பின்வாங்கியது நினைவிருக்கும். அத்தகைய வலுவான கோரிக்கையை எதற்குக் கைவிட்டார் அண்ணா?

பார்ப்போம் விரைவில் !

வாழ்க தமிழ்!

வாழ்க திராவிடம்!
--
திராவிடன்


Sources : திராவிடர்- நகரத் தூதன் , பெரியார்: மரபும் திரிபும்-எஸ்.வி.ராஜதுரை, பக்கம் 131, முதற்பதிப்பு - பிப்ரவரி 2001

கோப்பு எண் இந்திய அரசு, உள்துறை, எண். 247/1926 பொது

Tags